• PS-S1E33-பொன்னியின் செல்வன்/E33-மரத்தில் ஒரு மங்கை!(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Marathil Oru Mangai! / Puthu Vellam
    Sep 21 2022
    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Marathil Oru Mangai! -- கோட்டைத் தளபதியின் இரு ஆட்களும் தன் இரண்டு பக்கத்தில் வர, வந்தியத்தேவன் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். தான் தப்பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள்ளவே அவர்கள் தன்னுடன் வருகிறார்கள் என்பதைப் பற்றி அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை. கோட்டை வாசல் வழியாக வெளியே யாரையும் போக விடாமல் பார்த்துக் கொள்ளும்படி கட்டளை பிறந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. ஆனாலும் அவன் அன்று முன்னிரவுக்குள் தப்பிச் சென்றே தீரவேண்டும். பெரிய பழுவேட்டரையர் வந்துவிட்டால், பிறகு தப்பித்துச் செல்வது இயலாத காரியம்; உயிர் பிழைத்திருப்பதே முடியாத காரியமாகிவிடும்! ஆகவே, தஞ்சாவூர் கோட்டைக்குள் வந்தியத்தேவன் அங்குமிங்கும் அலைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, அவனுடைய மனம் தப்பிச் செல்லும் வழிகளைப் பற்றி ஆலோசித்துக் கொண்டேயிருந்தது. முதலில் இந்த யமகிங்கரர்களிடமிருந்து தப்ப வேண்டும்; பின்னர், கோட்டையிலிருந்து தப்பிச் செல்ல வேண்டும். எப்படித் தப்புவது? அதுதான் தெரியவில்லை. பார்க்கப்போனால் இவர்களிடமிருந்து தப்புவது பெரிய காரியமில்லை. இரண்டு பேரையும் ஒரு வினாடி நேரத்தில் தாக்கிக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடலாம். ஆனால் எங்கே ஓடுவது? தஞ்சைக் கோட்டையைப் பழுவேட்டரையர்கள் எவ்வளவு பலப்படுத்திக் கட்டியிருக்கிறார்கள் என்பது நாடறிந்த செய்தி. அவர்களுடைய அனுமதியின்றித் தஞ்சைக் கோட்டைக்குள் காற்றுக்கூட நுழைய முடியாது என்று ஜனங்கள் சொல்லுவார்கள். யமனும் வரமுடியாது என்று சக்கரவர்த்தியே இன்று காலையில் சொன்னார். அத்தகைய கோட்டையிலிருந்து எப்படிச் செல்வது? இந்த இருவரையும் தொட வேண்டியதுதான்; அவர்கள் உடனே கூச்சல் கிளப்பிவிடுவார்கள். அடுத்த கணத்தில் தான் பாதாளச் சிறைக்குப் போக நேரிடும்; அல்லது உயிரிழக்க நேரிடும். இவர்களைத் தாக்குவதில் பயனில்லை; தாக்காமல் தந்திரத்தினாலேயே தப்பிக்க வேண்டும். அப்படித் தப்பித்த பிறகு கோட்டையிலிருந்து வெளியேற வழி தேட வேண்டும். எவ்வளவு பலமான கோட்டையாயிருந்தாலும் இரகசியச் சுரங்கவழி இல்லாமற் போகாது. அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அது ...
    Más Menos
    15 m
  • PS-S1E32-பொன்னியின் செல்வன்/E32-பரிசோதனை(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Parisothanai / Puthu Vellam
    Sep 21 2022
    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Parisothanai -- சின்னப் பழுவேட்டரையரைக் கண்டதும் வந்தியத்தேவன் சண்டையை நிறுத்திவிட்டு அவரை நோக்கி நடந்தான். காவலர்கள் எழுந்து ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களை அவன் சிறிதும் இலட்சியம் செய்யாமல் நாலு அடி முன்னால் நடந்து வந்து, "தளபதி! நல்ல சமயத்தில் தாங்கள் வந்து சேர்ந்தீர்கள். இந்தப் பக்காத் திருடர்கள் என்னுடைய உடைமைகளைத் திருடிக் கொண்டதுமல்லாமல், என்னையும் கொல்லப் பார்த்தார்கள்! விருந்தாளியை இப்படித்தானா நடத்துவது? இதுவா தஞ்சாவூர் சம்பிரதாயம்? நான் தங்களுக்கு மட்டும் விருந்தாளியல்ல, சக்கரவர்த்திக்கும் விருந்தாளி; சக்கரவர்த்தினி சொன்னதைத்தான் தாங்களும் கேட்டீர்களே! பட்டத்து இளவரசரிடமிருந்து ஓலை கொண்டு வந்த தூதன். அப்படிப்பட்ட என்னை இந்தப் பாடுபடுத்துகிறவர்கள் மற்றவர்களை என்ன செய்து விட மாட்டார்கள்! இப்படிப்பட்ட திருடர்களைத் தங்கள் பணி ஆட்களாக வைத்துக் கொண்டிருப்பது பற்றி ஆச்சரியப்படுகிறேன். எங்கள் தொண்டை மண்டலத்தில் இப்படிப்பட்ட திருடர்களை உடனே கழுவில் ஏற்றிவிட்டு மறுகாரியம் பார்ப்போம்!" என்று சரமாரியாய்ப் பொழிந்தான். மூன்று வீரர்களை ஏக காலத்தில் எதிர்த்துப் புரட்டிக் கீழே தள்ளிய வாலிபனுடைய வீரச் செயலைப் பற்றிய வியப்பு இன்னும் பழுவேட்டரையரின் மனத்தை விட்டகலவில்லை. இத்தகைய வீரனை நாம் நமது காவற் படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் ஆசை அவருக்கு அதிகமாயிற்று. எனவே, அவர் சாந்தமான குரலில், "பொறு! தம்பி! பொறு! அப்படியெல்லாம் இவர்கள் செய்திருப்பார்கள் என்று தோன்றவில்லை! இவர்களை விசாரித்துப் பார்க்கிறேன்!" என்றார். "நான் கோருவதும் அதுதான்! இவர்களை விசாரியுங்கள்; விசாரித்து நீதி வழங்குங்கள்! என்னுடைய உடையும் உடைமையும் என்னிடம் திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!" என்றான் வல்லவரையன். "அடே! அந்தப் பிள்ளையை விட்டு விட்டு இப்படி வாருங்கள்! நான் சொன்னது என்ன? நீங்கள் செய்தது என்ன? இவன் மீது ஏன் கை வைத்தீர்கள்?" என்று கோபமாகக் கேட்டார் கோட்டைத் தளபதி. "எஜமானே! தாங்கள் சொன்னது சொன்னபடியே செய்தோம். இவரை எண்ணெய் முழுக்காட்டிப் புதிய ...
    Más Menos
    11 m
  • PS-S1E31-பொன்னியின் செல்வன்/E31-திருடர்! திருடர்!(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Thirudar! Thirudar! / Puthu Vellam
    Sep 7 2022
    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Thirudar! Thirudar! -- விஜயாலய சோழர் முதல், இரண்டாம் பராந்தகராகிய சுந்தர சோழர் வரையில் சோழ மன்னர்களின் உயிர்ச் சித்திரங்களை நம் வீரன் வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான். ஆஹா! இவர்களில் ஒவ்வொருவரும் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய மஹாவீரர்கள்! உயிரைத் திரணமாக மதித்து எவ்வளவு அரும்பெரும் செயல்களை இயற்றியிருக்கிறார்கள்! கதைகளிலும் காவியங்களிலும் கூட இப்படிக் கேட்டதில்லையே? இத்தகைய மன்னர் பரம்பரையைப் பெற்ற சோழ நாடு பாக்கியம் செய்த நாடு; இன்று அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள் எல்லாம் பாக்கியம் செய்த நாடுகள்தாம். மேற்கூறிய சோழ மன்னர்களின் சரித்திரங்களைச் சித்திரித்த காட்சிகளில் இன்னொரு முக்கியமான அம்சத்தை வந்தியத்தேவன் கவனித்தான். ஒவ்வொரு சோழ அரசருக்கும் பழுவூர்ச் சிற்றரசர் வம்சத்தினர் தலைசிறந்த உதவிகள் செய்திருக்கிறார்கள்; வீரத் தொண்டுகள் பல புரிந்து வந்திருக்கிறார்கள். முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ அபராஜிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர். பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள். இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும் போது அவனை ஒரு பழுவேட்டரையர் தன் மடியின் மீது போட்டுக் கொண்டு, "இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!" என்ற செய்தியைத் தெரிவித்தார். அவ்விதமே அரிஞ்சயருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்தாம். இதையெல்லாம் சித்திரக் காட்சிகளில் பிரத்யட்சமாகப் பார்த்த வல்லவரையன் சொல்ல ...
    Más Menos
    8 m
  • PS-S1E30-பொன்னியின் செல்வன்/E30-சித்திர மண்டபம்(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Chithira Mandabam / Puthu Vellam
    Aug 31 2022
    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Chithira Mandabam -- சின்னப் பழுவேட்டரையர் வந்தியத்தேவனைத் தம்முடன் ஆஸ்தான மண்டபத்துக்கு அழைத்துப் போனார். சக்கரவர்த்தியிடம் அவன் கூறியது என்ன என்பதைப் பற்றி அவன் சொன்ன சமாதானம் அவருக்கு அவ்வளவாகப் பூரண திருப்தி அளிக்கவில்லை. சக்கரவர்த்தியைத் தனியாகப் போய்ப் பார்க்கும்படி அவனுக்கு அனுமதி அளித்தது ஒருவேளை தவறோ என்றும் தோன்றியது. ஆதித்த கரிகாலரிடமிருந்து வந்தவனாதலால், அவனைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டியது முறை. ஆனால் தமையனார் முத்திரை மோதிரத்துடன் அனுப்பியுள்ளபடியால் சந்தேகிக்க இடமில்லை. ஆகா! இம்மாதிரி காரியங்களில் பெரியவருக்கு வேறொருவர் ஜாக்கிரதை சொல்லித்தர வேண்டுமா, என்ன? ஆனாலும், தாம் திடீரென்று தரிசன மண்டபத்துக்குள் சென்ற பொழுது அவ்வாலிபன் தயங்கி நின்று பயந்தவன் போல் விழித்தது அவர் கண் முன்னால் தோன்றியது. "அபாயம்! அபாயம்!" என்று அவன் கூவியது நன்றாகக் காதில் விழுந்ததாக ஞாபகம் வந்தது. "அபயம்" என்று சொல்லியிருந்தால், அது தம் காதில் "அபாயம்" என்று விழுந்திருக்கக்கூடியது சாத்தியமா? எல்லாவற்றுக்கும் இவனை உடனே திருப்பி அனுப்பாமலிருப்பது நல்லது. தமையனார் வந்த பிறகு இவனைப் பற்றி நன்றாய்த் தெரிந்து கொண்டு பிறகு உசிதமானதைச் செய்யலாம். இம்மாதிரி தீரனாகிய வாலிபனை நாம் நம்முடைய அந்தரங்கக் காவற் படையில் சேர்த்துக் கொள்ளப் பார்க்க வேண்டும். சமயத்தில் உபயோகமாயிருப்பான். ஏன்? இவனுக்கு இவனுடைய முன்னோர்களின் பழைய அரசில் ஒரு பகுதியை வாங்கிக் கொடுத்தாலும் கொடுக்கலாம். இம்மாதிரி பிள்ளைகளுக்கு ஒருமுறை உதவி செய்து விட்டால், அப்புறம் என்றைக்கும் நமக்குக் கட்டுப்பட்டு நன்றியுடனிருப்பார்கள். ஒருவேளை, இவன் உறுதியான விரோதி என்று ஏற்பட்டு விட்டால், அதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; எதற்கும் தமையனார் வந்து சேரட்டும் பார்க்கலாம். ஆஸ்தான மண்டபம் சென்றதும் வந்தியத்தேவன் அப்புறமும் இப்புறமும் ஆவலுடன் பார்க்கத் தொடங்கினான். தளபதியிடம் தான் ஓலையை எடுத்துக் கொடுத்த இடத்தில் உற்று உற்று நன்றாகப் பார்த்தான். தப்பித் தவறி இன்னொரு ஓலை,-- அந்த முக்கியமான ஓலை கிடக்கிறதா என்றுதான். ...
    Más Menos
    14 m
  • PS-S1E29-பொன்னியின் செல்வன்/E29-நம் விருந்தாளி(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Nam Virunthali / Puthu Vellam
    Aug 31 2022
    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Nam Virunthali -- புலவர்கள் சென்ற பிறகு அரண்மனை மருத்துவர் சக்கரவர்த்திக்கு மருந்து கலந்து கொண்டு வந்தார். மலையமான் மகளான பட்டத்தரசி அதைத் தன் திருக்கரத்தால் வாங்கிக் கணவருக்குக் கொடுத்தாள். அதுவரை பொறுமையாய்க் காத்திருந்த சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவனைப் பிடித்தபிடி விடாமல் இழுத்துக் கொண்டே சக்கரவர்த்தியின் அருகில் போய்ச் சேர்ந்தார். "பிரபு! புது மருந்தினால் ஏதாவது பலன் தெரிகிறதா?" என்று கேட்டார். "பலன் தெரிகிறதாக மருத்துவர் சொல்லுகிறார்; தேவியும் சொல்கிறார்; ஆனால் எனக்கென்னவோ நம்பிக்கை உண்டாகவில்லை. உண்மையைச் சொன்னால், தளபதி! இதெல்லாம் வீண் முயற்சி என்றே தோன்றுகிறது. என் விதி என்னை அழைக்கிறது. யமன் என்னைத் தேடிக் கொண்டு பழையாறைக்குப் போயிருக்கிறான் என்றே நினைக்கிறேன். அங்கே நான் இல்லையென்று அறிந்ததும், இவ்விடம் என்னைத் தேடிக் கொண்டு வந்து சேருவான்!..." "பிரபு! தாங்கள் இப்படி மனமுடைந்து பேசக் கூடாது. எங்களையெல்லாம் இப்படி மனங்கலங்கச் செய்யக் கூடாது. தங்கள் குல முன்னோர்கள் ..." "ஆ! என் குல முன்னோர்கள் யமனைக் கண்டு அஞ்சியதில்லையென்று சொல்லுகிறீர்! எனக்கும் என் குல முன்னோர்கள் பலரைப் போல் போர்க்களத்தில் முன்னணியில் நின்று போர் செய்து உயிர் விடும் பாக்கியம் கிடைக்குமானால், அத்தகைய மரணத்துக்குச் சிறிதும் அஞ்ச மாட்டேன்; சோர்வும் கொள்ள மாட்டேன். உற்சாகத்துடன் வரவேற்பேன். என்னுடைய பெரிய தகப்பனார் இராஜாதித்தியர் தக்கோலத்தில் யானை மேலிருந்து போர் புரிந்தபடியே உயிர் நீத்தார். சோழ குலத்தின் வீரப் புகழைத் தக்கோலம் போர்க்களத்தில் என்றென்றும் நிலைநாட்டினார். 'யானை மேல் துஞ்சிய தேவர்' என்று புகழ்பெற்றார். நான் என்ன புகழைப் பெறுவேன்? 'நோய்ப் படுக்கையில் துஞ்சிய சுந்தர சோழன்' என்றுதானே பெயர் பெறுவேன்? என்னுடைய இன்னொரு பெரிய தகப்பனார், கண்டராதித்த தேவர் சிவபக்தியில் ஈடுபட்டு மரண பயத்தை விட்டிருந்தார். ஸ்தல யாத்திரை செய்வதற்கு மேற்குக் கடற்கரை நாடுகளுக்குப் போனார். அங்கேயே காலமானார். 'மேற்கெழுந்தருளிய தேவர்' என்று அவரும் பெயர் பெற்றார். அவரைப் போன்ற சிவபக்தனும் அல்ல ...
    Más Menos
    9 m
  • PS-S1E28-பொன்னியின் செல்வன்/E28-இரும்புப் பிடி(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Irumpu Pidi / Puthu Vellam
    Aug 31 2022
    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Irumpu Pidi -- திடீரென்று பொங்கிய புது வெள்ளம் போன்ற ஆச்சரியத்தின் வேகம் சிறிது குறைந்ததும், புலவர் தலைவரான நல்லன் சாத்தனார், "பிரபு! அப்படியானால், இந்தப் பாடலை இயற்றிய கவி..." என்று தயங்கினார். "உங்கள் முன்னால், கால்களின் சுவாதீனத்தை இழந்து, நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் புவிச் சக்கரவர்த்திதான்!" என்றார் சுந்தர சோழர். புலவர்களிடையே பலவித வியப்பொலிகளும் ஆஹாகாரமும் எழுந்தன. சிலர் தங்களுடைய மனோநிலையை எவ்விதம் வெளியிடுவது என்று தெரியாமல் தலையையும் உடம்பையும் அசைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் தங்களுடைய மனோநிலை இன்னதென்று தங்களுக்கே தெரியாமல் கல்லாய்ச் சமைந்திருந்தார்கள்! சுந்தர சோழர் கூறினார்: "புலவர் பெருமக்களே! ஒரு சமயம் பழையாறையில் புலவர்களும் கவிஞர்களும் என்னைப் பார்க்க வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் உங்களில் சிலரும் இருந்திருக்கலாம். ஒவ்வொருவரும் சோழ குலத்தின் வள்ளல் தன்மையைக் குறித்து ஒவ்வொரு பாடல் சொன்னார்கள்; என்னைப் பற்றியும் பாடினார்கள். நான் 'இவருக்கு அதைக் கொடுத்தேன்', 'அவருக்கு இதை அளித்தேன்' என்றெல்லாம் பாடினார்கள். அச்சமயம் இளையபிராட்டி குந்தவையும் என் அருகில் இருந்தாள். புலவர்கள் பரிசில்கள் பெற்றுச் சென்ற பிறகு அவர்கள் பாடிய பாடல்களை அரசிளங்குமரி புகழ்ந்து பாராட்டினாள். குந்தவையிடம் நான் 'புலவர்களையெல்லாம் விட என்னால் நன்றாகப் பாட முடியும்' என்று சபதம் கூறினேன். பிறகு தான் வேடிக்கையாக இந்தப் பாடலைப் பாடினேன். 'எனக்குப் பரிசு கொடு!' என்று கேட்டேன். குழந்தை என் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, 'இந்தாருங்கள் பரிசு' என்று கன்னத்துக்கு இரண்டு அறை கொடுத்தாள்! அது நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கிறது; ஆனால் ஆண்டு எட்டுக்கு மேல் ஆகிறது!" என்றார். "விந்தை! விந்தை!" என்றும், "அற்புதம்! அற்புதம்!" என்றும் புலவர்கள் கூறி மகிழ்ந்தார்கள். குந்தவை என்ற பெயரைக் கேட்டதுமே வந்தியதேவனுக்கு மெய்சிலிர்த்தது. சோழ குலத்தில் பிறந்த அந்த இணையில்லாப் பெண்ணரசியின் எழிலையும் புலமையையும் அறிவுத்திறனையும் பற்றி அவன் எவ்வளவோ கேள்விப்பட்டதுண்டு. ...
    Más Menos
    10 m
  • PS-S1E27-பொன்னியின் செல்வன்/E27-ஆஸ்தான புலவர்கள்(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Aasthana Pulavargal / Puthu Vellam
    Aug 29 2022
    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Aasthana Pulavargal -- பராக்! பராக்! இதோ வருகிறார்கள் புலவர் பெருமக்கள்! கவிஞர் சிகாமணிகள்! தமிழ்ப் பெருங்கடலின் கரை கண்டவர்கள்! அகத்தியனாரின் வழி வந்தவர்கள்! தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள்! சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங் காவியங்களைத் தலைகீழாகப் படித்தவர்கள்! தெய்வத் தமிழ் மறையான திருக்குறளையும் ஒரு கை பார்த்தவர்கள்! இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் அறிந்தவர்கள்! இலக்கணம் கூறியதற்கு இலக்கியம் தெரிந்தவர்கள்! தாங்களே சுயமாகவும் கவி பாட வல்லவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எழுதிய கவிகள் அடங்கிய ஏட்டுச் சுவடிகள் கோடானு கோடி கரையான்களுக்குப் பல்லாண்டு உயிர் வாழ்வதற்கு உணவாகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! புலவர் பெருமக்கள் அவ்வளவு பேரும் கும்பலாகச் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் சந்நிதானத்துக்கு வந்து சேர்ந்தார்கள். "வாழ்க! வாழ்க! ஏழுலகமும் ஒரு குடையின் கீழ் ஆளும் சுந்தர சோழ மகா சக்கரவர்த்தி வாழ்க! பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமான் வாழ்க! புலவர்களைப் புரக்கும் பெருமான் வாழ்க! கவிஞர்களின் கதியான கருணை வள்ளல் வாழ்க! பண்டித வத்ஸலராகிய பராந்தக சக்கரவர்த்தியின் திருப் பேரர் நீடூழி வாழ்க!" என்று வாழ்த்தினார்கள். இந்தக் கோஷங்களையும் கூச்சல்களையும் சுந்தர சோழர் அவ்வளவாக விரும்பவில்லை. எனினும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், தமது நோயையும் மறந்து, வந்தவர்களை வரவேற்பதற்காக எழுந்திருக்க முயன்றார். உடனே, சின்னப் பழுவேட்டரையர் முன் வந்து "பிரபு, புலவர்கள் தங்களைத் தரிசித்து மரியாதை செலுத்திவிட்டுப் போக வந்திருக்கிறார்களேயன்றித் தங்களுக்குச் சிரமம் கொடுக்க வரவில்லை. ஆகையால் தயவு செய்து தங்களைச் சிரமப்படுத்திக் கொள்ளக்கூடாது!" என்றார். "ஆம், ஆம்! அரசர்க்கரசே! சக்கரவர்த்திப் பெருமானே! தங்களுக்குச் சிறிதும் சிரமம் கொடுக்க நாங்கள் வந்தோமில்லை!" என்றார் புலவர்களின் தலைவராகிய நல்லன் சாத்தனார். "உங்களையெல்லாம் நெடுநாளைக்குப் பிறகு பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் அமரவேண்டும். சில பாடல்கள் சொல்லிவிட்டுப் போகவேண்டும்!" என்றார் தமிழன்பரான ...
    Más Menos
    13 m
  • PS-S1E26-பொன்னியின் செல்வன்/E26-அபாயம்! அபாயம்!(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Abaayam! Abaayam! / Puthu Vellam
    Aug 29 2022
    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Abaayam! Abaayam! -- ஆஸ்தான மண்டபத்தில் புலவர்களுக்கு முன்னதாகவே வந்தியத்தேவன் பிரவேசித்தான். அங்கே ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் தான் சின்னப் பழுவேட்டரையராயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான். அவரைச் சுற்றிலும் பலர் கைகட்டி வாய் புதைத்து நின்றார்கள். அன்று வந்த ஓலைகள் பலவற்றை வைத்துக் கொண்டு ஒருவர் நின்றார். கணக்காயர் கணக்குச் சொல்வதற்குக் காத்திருந்தார். காவல்படைத் தலைவர்கள் சின்னப் பழுவேட்டரையருடைய அன்றாடக் கட்டளைகளை எதிர்பார்த்து நின்றார்கள். ஏவிய வேலைகளைச் செய்வதற்குப் பணியாளர்கள் காத்திருந்தார்கள். சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்று சில ஏவலாளர் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள். கையில் வெற்றிலைப் பெட்டியுடன் ஒருவன் ஆயத்தமாயிருந்தான். மிடுக்கிலும் பெருமிதத்திலும் யாருக்கும் பின்வாங்காதவனான வந்தியத்தேவன் கூடச் சிறிது அடக்க ஒடுக்கத்துடனேதான் சின்னப் பழுவேட்டரையரிடம் அணுகினான். பெரியவரைக் காட்டிலும் சின்னவர் வீரகம்பீரத்தில் இன்னும் ஒருபடி உயர்ந்தவராகவே காணப்பட்டார். நமது வீரனைப் பார்த்ததும் அவர் முகமலர்ச்சியுடன், "யார், தம்பி, நீ! எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். வீர வாலிபர்களைக் கண்டால் சின்னப் பழுவேட்டரையரின் கடுகடுத்த முகம் மலர்ந்து விடும். நாடெங்கும் உள்ள வாலிப வீரர்களைத் தம்முடைய காவல் படையில் சேர்த்துக்கொள்வதில் அவருக்கு மிக்க ஆர்வம். "தளபதி! நான் காஞ்சீபுரத்திலிருந்து வந்தேன்! இளவரசர் ஓலை கொடுத்து அனுப்பினார்!" என்று பணிவான குரலில் வந்தியத்தேவன் மறுமொழி சொன்னான். காஞ்சீபுரம் என்றதும் சின்னப் பழுவேட்டரையரின் முகம் கடுத்தது. "என்ன? என்ன சொன்னாய்?" என்று மீண்டும் கேட்டார். "காஞ்சீபுரத்திலிருந்து இளவரசர் கொடுத்த ஓலையுடன் வந்தேன்!" "எங்கே? இப்படிக் கொடு!" என்று அலட்சியமாய்க் கேட்டபோதிலும் அவருடைய குரலில் சிறிது பரபரப்புத் தொனித்தது. வல்லவரையன் அடக்க ஒடுக்கத்துடன் ஓலைச் சுருளை எடுத்துக் கொண்டே, "தளபதி! ஓலை சக்கரவர்த்திக்கு!" என்றான். அதைப் பொருட்படுத்தாமல் சின்னப் பழுவேட்டரையர் ஓலையை வாங்கி ஆவலுடன் ...
    Más Menos
    9 m